அண்மைய எரிபொருள் விலை உயர்வுக்கு இணங்க கோரப்பட்ட பேருந்து கட்டண திருத்தத்திற்கு உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகளைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாளை (08) திங்கட்கிழமை முதல் தனியார் பேருந்து சேவைகள் ஒட்டுமொத்தமாக 50 சதவீதம் வரை குறைக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும். அதற்கமைய, திருத்தப்பட்ட கட்டணங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ அதிகாரமும் எங்களுக்கு உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (5) இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம். இந்த மாத இறுதியில் டீசல் விலையும் மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றைக் கருத்திற்கொண்டே நாங்கள் கட்டணத் திருத்தத்தை நோக்கிச் செல்கிறோம். அனைத்துச் செலவுகளும் சுமார் 20% முதல் 25% வரை அதிகரித்துள்ளதால், இந்த வருடக் கட்டணத் திருத்தத்தை பொதுமக்கள் தாங்கிக்கொள்வது கடினமாக இருக்கும்" என்றார்.
காலை வேளைகள், பாடசாலைகள் நிறைவடையும் நேரங்கள் மற்றும் மாலை நேர அலுவலகப் பணி நேரங்கள் போன்ற நெரிசலான நேரங்களில் மாத்திரமே அத்தியாவசிய சேவைகள் இயக்கப்படும்.
வழக்கமாக இயக்கப்படும் நான்கு பயணங்களுக்குப் பதிலாக, அந்த நேர எல்லைகளில் மூன்று பயணங்கள் மாத்திரமே முன்னெடுக்கப்படும். ஒட்டுமொத்தமாகப் பேருந்து இயக்கங்கள் 50% ஆகக் குறைக்கப்படும்.
இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
.jpeg)