பொதுமக்களை அச்சுறுத்தி பல பகுதிகளில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை - சந்தேகநபர்கள் கைது

Sinthu

 



நாட்டின் பல பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து, 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்த பிரதான சூத்திரதாரிகள் மூவரை கண்டி தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று இதனை தெரிவித்துள்ளது.

கண்டி தலைமையகப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட முற்றுகையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, இக்கும்பலில் உள்ள இருவர் இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவான கொமாண்டோ படையில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் இணைந்தே நாடளாவிய ரீதியில் இந்த பாரிய கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கொள்ளைக் கும்பலின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ஹங்குராங்கெத்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ கமாண்டோ வீரர் எனவும், மற்றையவர் பேராதனை, முருத்தலாவ பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ கொமாண்டோ வீரர் எனவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் கெக்கிராவை, கினிகத்தேனை, பேராதனை, திறப்பனை மற்றும் அநுராதபுரம் போன்ற பல பகுதிகளில் இருந்து மாத்திரம் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

அவ்வாறு திருடப்பட்ட நகைகள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சிலவற்றை விசேட பொலிஸ் குழுவினர் மீட்டுள்ளனர்.

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டுக்குள் புகுந்த இக்கும்பல், அங்கிருந்து 2.8 மில்லியன் ரூபா ரொக்கப் பணத்தையும், 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.

மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஏனைய பொருள்கள், கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியிருந்த அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையங்களில் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரையும் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குக் கண்டி தலைமையகப் பொலிஸார் மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.