சுரேஷ் சலே நலமுடன் இருப்பதாகவும், அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(23.06.2026) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு என்று பிரத்தியேகமாக எந்தவொரு விசேட அறையும் உருவாக்கப்படவில்லை. எப்போதும் போன்று அங்குள்ள சாதாரண அறையில்தான் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த விசாலமான அறையில், இதற்கு முன்னரும் கூட பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும், அப்போது எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை. அத்துடன் இந்த அறைகள் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல.
தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு உணவு வழங்கப்படாமல் இல்லை. மாறாக அவர் வாயினால் உணவு உண்ண மறுப்பு வெளியிட்டு வருகின்றமையே இங்கு பிரதான பிரச்சினை.
எனினும், தேசிய வைத்தியசாலையில் அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அவர் தற்போது சுய நினைவுடன் நடமாடுவதுடன், அவருடைய தனிப்பட்ட வேலைகளை அவரே செய்து கொள்கின்றார்.
