மட்டக்களப்பில் வயோதிபர் ஒருவரின் வீடு அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நொச்சிமுனை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த முதியவர் ஒருவர் ஆலயத்தில் சண்டை பிடிக்கக் கூடாது எனத் தெரிவித்து மோதலைத் தடுத்தபோது அவர் கீழே வீழ்ந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த முதியவரின் வீடு, நொச்சிமுனை இசை நடனக் கல்லூரி வீதியில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தினத்தன்று முதியவர் மற்றும் அவரது மனைவி வீட்டைப் பூட்டிவிட்டுச் சமுர்த்தி காரியாலயத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்ற இருவர், வீடு பூட்டியிருந்ததையடுத்து மதில் மேலால் குதித்து வீட்டின் கதவை உடைத்து, ஜன்னல் மற்றும் அலமாரிகளின் கண்ணாடிகளை உடைத்து வீட்டைச் சேதப்படுத்திவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து வீடு திரும்பியவர்கள், வீடு உடைத்துச் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
