முன்னாள் காதலியை கடத்தி உயிரை மாய்க்க முயற்சி! – கார் வெடிப்பில் இளைஞர் பலி; இளம்பெண் மற்றும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, முன்னாள் காதலியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று இருவரும் ஒன்றாக உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இளைஞர், இறுதியில் கார் வெடிப்பில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 27 ஆம் தேதி, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஜோகிஹள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை–48 பகுதியில் இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொலிஸார் தெரிவித்த தகவலின்படி, உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவைச் சேர்ந்த 30 வயதுடைய நாகேந்திரா மற்றும் 23 வயதுடைய ரம்யா ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா உறவை முறித்ததுடன், நாகேந்திராவின் தொலைபேசி எண்ணையும் தடை செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரா, பெங்களூரு ஜெயநகரில் உள்ள ரம்யாவின் வீட்டுக்குச் சென்று அவரை வலுக்கட்டாயமாக வாடகை காரில் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பொலிஸார் கார் ஓட்டுநர் பிரவீனை தொடர்புகொண்டு, இது கடத்தல் சம்பவம் என்பதால் உடனடியாக வாகனத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த உரையாடலைக் கேட்டு மேலும் ஆவேசமடைந்த நாகேந்திரா, "இருவரும் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொள்வோம்" என்று கூறி ரம்யாவை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
ரம்யாவின் அலறல் சத்தத்தைத் தொடர்ந்து, ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தியதால், ரம்யாவும் ஓட்டுநர் பிரவீனும் துரிதமாக வாகனத்திலிருந்து வெளியேறி உயிர் தப்பினர்.
அவர்கள் வெளியேறிய சில நொடிகளில், காருக்குள் இருந்த நாகேந்திரா தீப்பற்றக்கூடிய வெடிபொருள் போன்ற ஒன்றை வெடிக்கச் செய்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில், நாகேந்திரா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
காயமடைந்த ரம்யா மற்றும் கார் ஓட்டுநர் பிரவீன் ஆகியோர் துமகூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளம்பெல்லா பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
