எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும், 2026ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும் தயாராகுவதற்கும் போதிய கால அவகாசம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (16.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் என்ற மிகக் குறைந்த மட்டத்திலேயே உள்ளதால், க.பொ.த உயர்தரப் பரீட்சை என்பது கடுமையான போட்டித் தன்மையைக் கொண்ட ஒன்றாக மாறியுள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, கல்வி அமைச்சு இந்த விவகாரத்தை மிகவும் மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். கடந்த 2022 முதல் 2025 வரையான காலப்பகுதியில் பாடத்திட்டங்களை நிறைவு செய்ய 27 முதல் 31 மாதங்கள் வரை அவகாசம் இருந்த போதிலும், 2026 மாணவர்களுக்கு வெறும் 21 மாதங்களே கிடைத்துள்ளன. நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளில் இன்னும் பாடத்திட்டங்கள் முடிக்கப்படவில்லை.
பாடத்திட்டங்களை மாத்திரம் அவசரமாக முடிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களுக்கு முகங்கொடுக்கவும் சுய கற்றலுக்கும் போதிய நேரம் தேவை. அத்துடன், 'டித்வா' சூறாவளிப் பேரழிவு காரணமாக மாணவர்கள் தமது பாடக்குறிப்புப் புத்தகங்களை இழந்துள்ளனர். முதல் முறை பரீட்சை எழுதுபவர்கள் மட்டுமன்றி, 2ஆம் மற்றும் 3ஆம் முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் இம்முறை முடிவுகள் வெளியானதில் இருந்து பரீட்சைக்கான கால இடைவெளி மிகக் குறைவாகவே உள்ளது.
