இலங்கை அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் விரிவுரையாளர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, உயர்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளின் தரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க எச்சரித்துள்ளார்
இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ள அவர், “தேவைக்கும் இருப்புக்குமான பாரிய இடைவெளி அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திறம்படச் செயல்பட 12,000 முதல் 13,000 நிரந்தர விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்றனர்.
அத்தோடு கூடுதலாகச் சுமார் 4,000 தற்காலிக விரிவுரையாளர்களும் தேவை ஆனால் 2025 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் சேர்த்து வெறும் 6,800 நிரந்தர விரிவுரையாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
பல்கலைக்கழகக் கட்டமைப்பு சுமுகமாக இயங்கக் குறைந்தபட்சம் 8,000 நிரந்தர விரிவுரையாளர்களாவது அவசியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
துறை ரீதியான மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் (Ideal Ratio) ஒவ்வொரு துறைக்கும் இருக்க வேண்டிய உகந்த விரிவுரையாளர் - மாணவர் விகிதத்தை அவர் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார்
நிர்வாகத் துறை (Management): 18 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர்.
தகவல் தொழில்நுட்பம் (IT): 10 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர்.
கால்நடை அறிவியல் மற்றும் பல் மருத்துவம்: 5 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர்.
கடந்த ஆண்டு 1,400 விரிவுரையாளர்களைப் பணியமர்த்த அரசாங்கம் அனுமதி அளித்தபோதிலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாததால் அதில் 48% முதல் 49% வரையான இடங்களே நிரப்பப்பட்டுள்ளன (குறிப்பாக மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில்).
மேலும், பல நியமனங்கள் புதிய சேர்க்கையாக இல்லாமல் வெளி மாகாணப் பல்கலைக்கழகங்களில் இருந்து நகரப் பல்கலைக்கழகங்களுக்கான இடமாற்றங்களாகவே அமைகின்றன.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 36% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் வேறு வழிகளில் வருமானம் ஈட்டவும் கட்டுப்பாடுள் உள்ளன.
